அட்லாண்டா: அமெரிக்காவில் நடந்து வரும் ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டிகளில் செல்சீ, பிளமெங்கோ அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. 21வது கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் கடந்த 14ம் தேதி துவங்கி வரும் ஜூலை, 13ம் தேதி வரை நடக்கவுள்ளன. இப்போட்டிகளில் உலகளவில் சிறந்த 32 அணிகள் போட்டியிடுகின்றன. இவை, 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், அந்த பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் ரவுண்ட் ராபின் முறையில் மோதும். இந்த சுற்றுகளின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இப்போட்டிகளில் மொத்த பரிசுத் தொகையாக ரூ.8647 கோடி வழங்கப்பட உள்ளது. போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் அணிக்கு, ரூ.1080 கோடி பரிசு கிடைக்கும். உலகளவில் பிரம்மாண்டமான பரிசுத் தொகை வழங்கப்படும் போட்டி என்பதால், இந்த போட்டிகளில், உலக புகழ் பெற்ற, பாரிஸ் செயின்ட்-ஜெர்மெய்ன் (பிரான்ஸ்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), போடாஃபோகோ (பிரேசில்), அல் – ஹிலால் (சவுதி அரேபியா) உள்ளிட்ட அணிகள் களமிறங்கி உள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில், குரூப் ஏ பிரிவில், அல் அஹ்லி – இன்டர் மியாமி அணிகள் இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது. பால்மெராஸ் – போர்டோ (ஈஸ்ட் ரூதர்போர்ட்) அணிகள் இடையிலான போட்டியும் டிரா ஆனது. குரூப் பி பிரிவில் நடந்த போட்டிகளில், அட்லெடிகோ டி மாட்ரிட் அணியை, பாரிஸ் செயின் ஜெர்மெய்ன் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
மற்றொரு போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை, போடாஃபோகோ அணி, 2-1 என்ற கணக்கில் வென்றது. குரூப் சி பிரிவில் நடந்த போட்டி ஒன்றில், பேயர்ன் மியுனிச் அணி, ஆக்லாண்ட் சிட்டி அணியை, 10-0 என்ற கோல் கணக்கில் வென்று அதிரடி காட்டியது. மற்றொரு போட்டியில், போகா ஜூனியர்ஸ் – பென்ஃபிகா (மியாமி) இடையிலான போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. குரூப் டி பிரிவில் நடந்த போட்டிகளில், லாஸ்ஏஞ்சல்ஸ் எப்சி (அட்லாண்டா) அணியை, 2-0 என்ற கோல் கணக்கில் செல்சீ அணி வெற்றி கண்டது. மற்றொரு போட்டியில் எஸ்பெரன்ஸ் டி டுனிஸ் (பிலடெல்பியா) அணியை, 2-0 என்ற கணக்கில் பிளமெங்கோ அணி வென்றது.