நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று, அல் ஹிலால், ஃப்ளுமினென்ஸ் அணிகள் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில், உலகின் புகழ்பெற்ற 32 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வந்தன. போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது நாக்அவுட் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று நடந்த நாக்அவுட் சுற்றுப் போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த அல் ஹிலால் அணியும், இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் அணியும் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதிய இப்போட்டியில், அல் ஹிலால் அணியை சேர்ந்த மார்கோஸ் லியானார்டோ 2 கோல்கள் மால்கம், கலிதோ கவுலிபேலி தலா ஒரு கோல் போட்டனர். மான்செஸ்டர் அணியின் பெர்னார்டோ சில்வா, எர்லின் ஹாலண்ட், பில் ஃபோடன் தலா ஒரு கோல் போட்டனர்.
அதனால், 4-3 என்ற கோல் கணக்கில் வென்ற அல் ஹிலால் காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் பிரேசிலை சேர்ந்த ஃப்ளுமினென்ஸ் அணியும், இத்தாலியை சேர்ந்த இன்டர் மிலன் அணியும் மோதின. இப்போட்டியில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஃப்ளுமினென்ஸ் அணியின் ஜெர்மான் கேனோ, ஹெர்குலஸ் தலா ஒரு கோல் போட்டனர். இன்டர் மிலன் அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை. அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஃப்ளுமினென்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.