சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சுற்றுலா தளங்களில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தின் மத்தியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் சிக்கிமில் பல்வேறு இடங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வடக்கு மாவட்டமான மங்கன் பெரும்சேதங்களை சந்தித்தது. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் நகரங்கள் இருளில் மூழ்கின. தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டது. மங்கன் மாவட்டத்துடன் டிசாங்கு மற்றும் சங்தாங் நகரங்களை இணைக்கும் பெய்லி என்ற பாலம் இடிந்து விழுந்ததாலும், நிலச்சரிவுகளாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிரபல சுற்றுலா தலங்களான டிசாங்கு, சங்தாங், லாச்சேன் ஆகிய பகுதிகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு சுமார் 2000 வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டுள்ளனர். மழை வெள்ளம், நிலச்சரிவுகளின் எதிரொலியாக நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் பேரிடர் மேலாண் படையினரால் அவர்களை அணுக முடியவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கை இன்று தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்வதற்கு மாற்று சாலை இணைப்பு அமைக்கப்படும் வரை சுற்றுலா பயணிகள் அதே இடத்திலேயே தங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ள பகுதிகளை எளிதில் சென்றடையும் வகையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.