தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் துணி வாங்குவதுபோல் நடித்து ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய 2 ஆந்திர பெண்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (65). அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 2 பெண்கள் துணி வாங்க வந்தனர். அப்போது கடையில் வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்தது.
ஒவ்வொருவருக்காக ஊழியர்கள் துணிகளை காண்பித்து கொண்டிருந்தனர். கூட்டத்தை பயன்படுத்திய 2 பெண்களும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணி பண்டலை எடுத்து கட்டைபையில் வைத்து தப்பிக்க முயன்றனர். இதை பார்த்த ஊழியர்கள், இரு பெண்களையும் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து யானைக்கவுனி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு பெண்களிடமும் விசாரித்தபோது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தோசம் (42), ராம் துளசி (45) என்பதும் சென்னையில் பல கடைகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.
மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கும்பல் கும்பலாக வந்து தனித்தனியாக பிரிந்து சென்னையில் கூட்ட நெரிசல் பகுதிகளில் கைவரிசை காட்டுவது, கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தால் துணி வாங்குவதுபோல் சென்று திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சவுகார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.