போடி: தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் ஆடி 18ல் தொடங்க வேண்டிய ஏலக்காய் சீசன், பருவநிலை மாற்றத்தால் தற்போது ஒரு மாதம் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லைப்பகுதிகளான தேனி மாவட்டத்தின் போடிமெட்டு, சாக்கலூத்து மெட்டு, கம்பம்மெட்டு, குமுளி பகுதிகளிலும், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலும் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடந்து வருகிறது. பொதுவாக ஏலத்தோட்டங்களில் ஒரு ஏக்கருக்கு 500 செடிகள் வரை நட்டு வைத்தால் 3 ஆண்டுகளில் ஏலக்காய் செடியின் தூரில் முளைக்க தொடங்கி சுமார் 15 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். இதில் நல்லாணி, மைசூர், பங்கனவள்ளி, கிருதாழி என பலதரப்பட்ட ரகங்கள் உள்ளன.
சரியான சீதோஷண நிலையில் வளர்த்தெடுத்தால் வருடத்திற்கு ஆறு முறை அறுவடை செய்யலாம். இதில் ஒரு செடியில் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை கிடைக்கும். ஏலக்காய் சீசன் ஆடி 18ம் தேதி தொடங்குவது வழக்கம். முன்னதாக, ஒரு வருடத்தில் ஆறு எடுப்பு சீசன் முடிந்தவுடன் ஏப்ரல் இறுதியில் துவங்கி மே, ஜூன் முதல் வாரம் வரை ஏலத்தோட்டத்தில் செடிகள் களை எடுக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை தொழிலாளர்கள் செய்து முடிப்பர். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இந்த ஆண்டு ஏலக்காய் உற்பத்தி தாமதமாகி விட்டது. ஆடி 18ல் சீசன் துவங்காமல், ஒரு மாதம் கழித்து சீசன் துவங்கும் நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.