புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காலடிபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் ப்ளூ காய்ச்சலுக்கான டாமிங் ப்ளூ மாத்திரை தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ப்ளூ காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கான போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.