சென்னை: பருவநிலை மாற்றம் அதனால் தொழிலாளர்கள் மீது ஏற்படும் தாக்கம், அதிலிருந்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்த சர்வதேச மாநாடு ஜெனிவாவில் நடந்தது. இதில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவரும், விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவருமான பொன்குமார் கலந்து கொண்டார். மாநாட்டில் பொன்குமார் பேசியதாவது:
தமிழ்நாட்டில் கடும் வெயிலால் பாதிக்கக்கூடிய தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு பணி நேரத்தில் மாற்றங்களை செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதாவது காலை 11 மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வெயிலில் வேலை செய்ய தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது என்பதற்கான உத்தரவு.
அதனை தொடர்ந்து இந்த கடும் வெயில் அலையை ஒரு மாநில இயற்கை பேரிடராக அறிவித்து ஆணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியமும் வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் காங்கிரீட் வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கக்கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கும், தொழிலாளர்களின் பாதிப்புகளை குறைப்பதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி தமிழ்நாட்டில் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.