மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை நடைபெறும். இப்பகுதியில் ஆண்டுதோறும் 25 லட்சம் டன்களுக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் உப்பு உற்பத்தி துவங்கியது. பருவ நிலை மாற்றத்தின் காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சராசரி உப்பு உற்பத்தியில் இந்த ஆண்டு 60 சதவீத உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தியில் நஷ்டம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.