சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டம் நேற்று தொடங்கியது. இதை ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: கடல்சார் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதற்கு நிலையான மற்றும் நெகிழ்திறன் கொண்ட கடல் அடிப்படையிலான பொருளாதாரத்திற்கான ஜி20 உயர் மட்டக் கோட்பாடுகளை உருவாக்குவதில் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.
இந்த கட்டமைப்பாக தன்னார்வ அடிப்படையில் பயன்படுத்தப்படலாம். உலகளாவிய பெருங்கடல், கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதாரமாக உள்ளது. கடலோர நாடுகளான அனைத்து ஜி20 உறுப்பு நாடுகளும் கடலோர மற்றும் கடல்சார் வளங்களைப் பாதுகாத்து, அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்தும் தீவிர பொறுப்பைக் கொண்டுள்ளது. பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, பாலைவனமாதல் மற்றும் மாசு போன்ற சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய சவால்களை சமாளிக்க நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது. நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், நமது வளர்ச்சி மற்றும் பருவநிலை இலக்குகளை அடைவதற்கான பாதையில் இன்னும் பயணிக்கவில்லை.
வறுமையை ஒழித்தல், எரிசக்தி மற்றும் வளங்களுக்கான சமமான அணுகல், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய முயற்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளைப் பிரதிபலிக்கும் தலைமைத்துவ ஆவணங்கள், முடிவுகளின் ஆவணம் மற்றும் தலைவர்கள் உரையின் சுருக்கம் ஆகியவற்றை நாங்கள் எதிர்நோக்குகிறோம். உலகளாவிய நல்வாழ்வை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.