எங்கு பார்த்தாலும் பேய் மழை கொட்டுகிறது. அது வெளிநாடாக இருந்தாலும் சரி, வெளி மாநிலமாக இருந்தாலும் சரி. கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, உயிர்பலிகள் அந்த வகை தான். இப்போது இமாச்சல், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கணக்கிட முடியாத அளவுக்கு கொட்டித்தீர்க்கிறது கனமழை. அதிலும் குறிப்பாக பாலைவனமாக கருதப்படும் ராஜஸ்தான் மாநில பகுதிகளில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இயற்கையின் மாற்றத்தை என்னவென்று சொல்வது, எப்படி சமாளிப்பது? இதுதான் இன்றைய உலகம் முன் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.
உலகம் முழுவதும் பருவநிலை மாறிவிட்டது. திடீர் பெரு மழை பெய்கிறது. மேகவெடிப்பு என்கிறார்கள். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட தொழில்நுட்ப அடிப்படையில் மழை வருவதையும், அது பெய்யக்கூடிய அளவையும் முன்கூட்டியே கண்டுபிடித்து சொல்லக்கூடிய வசதி உள்ள நாடுகளிலும் இந்த பாதிப்பை தவிர்க்க முடியவில்லை. திணறிப்போய் இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார்க் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 260 செமீ மழை கொட்டி இருக்கிறது. வறண்ட பாலைவனப்பகுதி. ஆண்டு முழுவதும் வறட்சி நீடிக்கும் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு.
சாலைகளில் எல்லாம் காட்டாற்று வெள்ளம். சாலைப்போக்குவரத்தை துண்டிக்க வேண்டிய நிலை. பாலைவனத்தில் இந்த நிலை நீடித்தால், மழைப்பொழிவு பிரதேசங்களின் நிலை என்னவாகும்? வடகிழக்கு மாநிலங்களே அதற்கு சாட்சி. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் இன்னும் மழைபாதிப்பில் இருந்து மீளவில்லை. இமாச்சலில் பெரும் பகுதி அச்சத்தில் வாழவேண்டிய நிலை. அந்த அளவுக்கு மழை பாதிப்பு, மேகவெடிப்பால் நிலச்சரிவு. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப முடியாத நிலை. எப்படி உதவுவது, எந்தவகையில் உதவுவது என்று தெரியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
இன்னொரு பக்கம் காற்று மாசுபாடு. நாடு முழுவதும் வேகமாக மோசமடைந்து வரும் காற்றின் தரம் குறித்து மோடி அரசு எந்தவித கவலையும் இல்லாமல் இருக்கிறது. சுற்றுப்புற சூழல், பருவநிலை மாற்றம் குறித்த எந்தவித விஞ்ஞான அறிவும் மோடி தலைமையிலான அரசிடம் வெளிப்படவில்லை. புகழ்பெற்ற லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 7.2% காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 நகரங்களில் சுமார் 34,000 இறப்புகள் காற்றுமாசுவால் நடக்கின்றன என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை ஒருபுறம் இருக்க கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டணம், சுற்றுச்சூழல் இழப்பீடு நிதியில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக செலவழிக்கப்படாமல் உள்ளது. அதாவது ரூ.665.75 கோடி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய இந்தியாவின் யதார்த்தம். நாடு முழுவததும் 131 நகரங்களில் காற்றுமாசுவை தடுக்க ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி போதாது. இன்றைய காலக்கட்டத்திற்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்திற்கும் காற்று மாசுபாட்டிற்கும் பெரும் தொடர்பு உண்டு. உலக சுகாதார அமைப்பு இதற்காக முன்முயற்சி எடுத்தும் எந்தநாடும் கவலைப்படவில்லை. இந்தியா போன்ற 145 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் பருவநிலை மாற்றம் பேரழிவை ஏற்படுத்தும். வயநாடு அதற்கு உதாரணம். காலத்தில் விழித்திருப்பது நல்லது.