சென்னை: பூவுலகின் நண்பர்கள் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இணைந்து, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஊடக ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடத்தியது. இதில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இன்று உலகம் எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்களில் ஒன்று காலநிலை மாற்றம். மாபெரும் இச்சவாலைச் சந்திக்கத் தமிழ்நாடு முன்னிலை வகிக்க வேண்டிய நேரம் இது. இதனடிப்படையில் தான் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. வுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக உரையாற்றினார். பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஊடக ஆசிரியர்களிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து ஊடக நிறுவனங்களும் அன்றாடம் காலநிலை மாற்றம் குறித்த செய்திகளை வெளியிட வேண்டும், அனைத்துத் தரப்பு செய்திகளையும் காலநிலை மாற்றக் கண்னோட்டத்திலும் அணுக வேண்டும். புவி வெப்பமயமாதலின் தீவிர பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் விளிம்பு நிலைச் சமூகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் வெளியிட வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு தீர்வாக முன்மொழியப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்களின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும், போலித் தீர்வுகளை அடையாளம் காண வேண்டும். செய்தியாளர்களுக்கும், பிற செய்தி ஆசிரியர்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்தான செய்திகளை உருவாக்குவதற்கான உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட செய்தி ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது ஊடகங்களில் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் குறித்தான செய்திகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக உறுதி அளித்தனர்.