தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நம்நாடு பிரகாசிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து டெல்லியில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். பின்னர், பள்ளி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;
தொடர் முயற்சியால் மட்டுமே நமது இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும். ஸ்வச் பாரத் இயக்கத்தின் வெற்றி நமது ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியின் விளைவாகும். அம்ருத் திட்டத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும். ஸ்வச் பாரத் திட்டத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வேன். இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய வெற்றிகரமான மக்கள் பங்கேற்பு இயக்கம் தூய்மை இந்தியா. பள்ளிகளில் தனி கழிப்பறை கட்டியதால் பெண்கள் அதிகமாக கல்வி கற்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நம்நாடு பிரகாசிக்கும். தூய்மை இந்தியா திட்டம் மூலம் ஆண்டுதோறும் 70 ஆயிரம் குழந்தைகளின் உயிர்கள் காக்கப்படுகின்றன. குழந்தைகளின் உயிர்கள் காக்கப்படுவதாக சர்வதேச பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது இளம் நண்பர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றினேன். இன்று அனைவரும் சுற்றுப்பகுதியில் தூய்மைப் பிரசாரம் மேற்கொள்ள அழைக்கிறேன். இந்த முயற்சி தூய்மை இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார்.