தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே வகுப்பறையில் 5 மாணவர்களின் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்ததாக கூறப்படுகிறது. இதை ஒரு ஆசிரியை, செல்போனில் புகைப்படம் எடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்டதற்கு, வகுப்பறையில் பேசி கொண்டு இருந்ததால் செல்லோ டேப் ஒட்டியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் மனு அளித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் கூறுகையில், கடந்த மாதம் 21ம் தேதி ஆசிரியர் வகுப்பில் இல்லாததால் ஒரு மாணவனை பார்த்து கொள்ள கூறியுள்ளார்கள்.
அந்த மாணவன் தான் வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியுள்ளார். இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் முருகேஸ்வரி, பெல்சி ஸ்மாகுலேட் கிறிஸ்டி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.