சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “செம்மொழி நாள்” விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆற்றிய உரையில்; இன்று முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் பிறந்த நாள் – இந்த நாளை தமிழ்நாடு அரசின் சார்பில், “செம்மொழி நாள்” விழாவாக கடைபிடிக்கவேண்டும் என்று சொல்லி, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, சட்டமன்றத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மானிய கோரிக்கையில் அறிவித்த அறிவிப்பின்படி இன்றைக்கு நம்முடைய முத்தமிழறிஞர் தமிழாய் வாழ்ந்தவர் – நமக்கெல்லாம் ஒப்பற்ற காவியமாய் வாழ்ந்தவர் என்று இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம்.
நேரத்தின் அருமை கருதி, நம்முடைய முத்தமிழறிஞர் அய்யா திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டிக்காத்து, ஐந்து முறை இந்த நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இங்கே ஒளிநாடாவில் காட்டப்பட்டது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்காக, இந்த நாட்டின் வளர்ச்சிக்காக, மற்ற மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழி காட்டக்கூடிய வகையில், ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தார். அதே நிர்வாகத்தை நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களிடம் ஒப்படைத்து, இன்றைக்கு தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய வகையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகை தந்திருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களை வருக வருக என நான் இரு கரம் கூப்பி வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து கொண்டிருக்கக்கூடிய முன்னிலை பொறுப்பேற்றிருக்கின்ற நம்முடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சகோதரர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அன்பிற்கினிய சகோதரர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும் மற்றும் வருகை தந்திருக்கின்ற மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், வணக்கத்திற்குரிய சென்னை மேயர் அவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கும், பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து வருகைபுரிந்த தலைவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், கலைஞர் அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்புக்களையும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகத்துறையை சார்ந்த நண்பர்களையும், பொதுமக்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் இந்த செம்மொழி நாள் கடைப்பிடிக்கின்ற சூழ்நிலையில், நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றோம். அதேநேரத்தில், நம்மோடு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா அவர்கள் இன்னும் நம்மை வழிநடத்தவில்லையே என்ற ஒரு ஏக்கம் இருந்தாலும், நமக்கெல்லாம் அவர் பல்வேறு வழிகளைக் காட்டி சென்றிருக்கின்றார்கள். அந்த வகையில் தான், நாம் இந்த விழாவை சிறப்பாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பல்வேறு திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதுவும் குறிப்பாக தமிழுக்கு செய்தததை மட்டும் ஒரு சில கருத்துக்களைச் சொல்லி காலத்தின் அருமை கருதி விடைபெற விரும்புகிறேன். இன்னும் பட்டிமன்ற நிகழ்ச்சி இருக்கிறது. நீங்கள் அதையெல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
கன்னியாகுமரியில் வானுயர வள்ளுவர் சிலையை அமைத்துத் தந்தார் – சென்னையில் வள்ளுவர் கோட்டம் தந்தார் – சென்னை, மயிலாப்பூரில் வள்ளுவர் கோயிலை கட்டித்தந்தார் – அரசு போக்குவரத்து பேருந்துகளில் திருக்குறளை இடம் பெறச் செய்தார் – திருக்குறளுக்கு குறளோவியம் தீட்டினார் – சங்கத் தமிழை சுவையோடு படைத்தார் – இலக்கணத்தை எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தொல்காப்பிய பூங்கா அமைத்தார் – அவர் தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகள் மிக மிக உண்டு – அவற்றில் மணி மகுடமாக திகழ்வது தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து – நம்முடைய நீண்ட நாள் கோரிக்கை – தமிழர்களுடைய ஒவ்வொருடைய கோரிக்கை – ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு – நம்முடைய டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அய்யா அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அன்னை சோனியா காந்தி அவர்களின் முயற்சியிலும், உறுதுணையோடும் அந்த செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். அதனால்தான், இன்றைக்கு செம்மொழி என்கிற அந்தஸ்தை நாம் பெற்றிருக்கின்றோம். அதனால், நாம் அதை விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
அதே நேரத்தில், மத்திய தமிழாய்வு நிறுவனத்தை உருவாக்குவதற்கு வேறு மாநிலத்திற்கு செல்லக்கூடிய அந்த அலுவலகத்தை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்தார் – குறிப்பாக சென்னையில், சுமார் 15 ஏக்கர் நிலத்தில் சிறப்பான ஒரு கட்டிடம் அமைவதற்குக் காரணமாக இருந்தார். அதனை தொடர்ந்து நம்முடைய முத்தமிழறிஞர் அவர்கள் தந்த முன்வைப்பு தொகை பெற்று ஆண்டுதோறும் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் செம்மொழி விருது என்கின்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இடையில், ஆட்சிமாற்றம் காரணமாக, நின்றிருந்த அந்த பத்து ஆண்டு கால விருதை கூட இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான் வழங்கினார்கள்.
அதே போல, இன்றைக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைய காரணமாக இருந்ததோடு, முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், கடந்த நான்காண்டுகளில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், எண்ணற்ற விருதுகள், திட்டங்கள் இன்றைக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழுக்குப் பெருமையை பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை இந்த செம்மொழி நாளாக கொண்டாடுவதோடு, தமிழ் வளர்ச்சி இயக்ககம் வாயிலாக, 29 பிரிவுகளில், 79 அறிஞர்களுக்கு சிறப்பாக செயல்பட்ட தமிழ் அமைப்புக்கும் சேர்த்து 80 விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
தகைசால் தமிழர் விருது 10 இலட்சம் ரூபாய் நன்கொடையோடு நான்கு தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது – பத்து லட்சம் வீதமாக முத்தமிழறிஞர் கலைஞர் விருது முதல்முறையாக வழங்கப்பட்டது – 5 இலட்சம் வீதமாக இலக்கிய மாமணி விருது 3 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது – செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலமாக மொத்தம் நான்கு வகையான விருதுகள் – தொல்காப்பியர் விருது – குரல்பேர விருது – இளம் அறிஞர் விருது – கலைஞர் மு.க.செம்மொழி தமிழ் விருது கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இதுவரை 11 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 254 தமிழறிஞர்களுக்கு ரூபாய் 4 கோடியே 70 இலட்சம் மதிப்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கனவு இல்லம் – முக்கிய விருதுகள் பெற்றவர்கள் – சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றவர்கள் – கலைஞர் செம்மொழி விருது பெற்றவர்கள் போன்றவர்களுக்கு இன்றைக்கு அவர்கள் விரும்புகின்ற இடங்களில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் தமிழ்வழி அவர்களுக்கு மார்பளவு சிலை – தாளமுத்து நடராசன் அவர்களின் நினைவு மண்டபம் புதுப்பிக்கப்பட்டது – கபிலர் நினைவு தூண் கள்ளக்குறிச்சியில் திறக்கப்பட்டுள்ளது – கணியன் பூங்குன்றனார் அவர்களுக்கு சிவகங்கையில் நினைவுத்தூண் திறக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் அவர்களுக்கு காசியில் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது – கவியரசு முடியரசனார் அவர்களுக்கு திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது – பாவணார் கோட்டம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பதவியேற்ற நான்காண்டுகளில், தமிழ்நாடு அரசில் இதுவரை இல்லாத வகையில், 19 சிறப்பு மலர்கள் இங்கே வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், இன்றைக்கு 54 சிறப்பு வெளியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தை 45 லட்சம் நபர்கள் நேற்றுவரை பார்வையிட்டுள்ளனர் – கலைஞர் உலக அருங்காட்சியத்தை 5 இலட்சம் நபர்கள் கண்டுகளித்துள்ளனர் – எங்கும் தமிழ் – எதிலும் தமிழ் – என்றும் தமிழ் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உறுதியான முடிவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
அண்மையில், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை தமிழ் வார விழாவாக கொண்டாடப்பட்டது. திருக்குறள் வார விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவாசகமான சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்பதற்கேற்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மிகச் சிறப்பாக தமிழ் வளர்ச்சித் துறை நம்முடைய அரசு இன்றைக்கு செயல்படுத்துகிறது. அந்த வகையில், இன்றைக்கு பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி வருகிறோம். எனவே, நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறையின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதுபோன்று பல்வேறு துறையின் மூலமாகவும் இன்றைக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அந்த வகையில் மீண்டும் இந்த ஆட்சி அமைவதற்கு நாமெல்லாம் இந்த நேரத்தில், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நம்முடைய அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி உருவாவதற்கு நாமெல்லாம் உறுதி எடுத்துக் கொள்ளக்கூடிய சிறப்பான நாள் என்று நான் கருதுகிறேன். எனவே, அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்வதோடு, நம்முடைய அரசு செயலாளர் அவர்கள் இறுதியாக நன்றியுரை ஆற்றயிருக்கிறார்கள். அதே நேரத்தில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆண்டுதோறும் மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் மூலமாக வழங்கக்கூடிய செம்மொழி விருது வழங்கப்பட இருக்கிறது.
இன்றைக்கு நான்காண்டு கால சாதனை மலரும் நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய திருக்கரத்தால் வெளியிடப்பட இருக்கின்றது. அதே போல, இன்றைக்கு இரண்டு நூல்களும் வெளியிடப்பட இருக்கின்றது. இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொண்டு, மீண்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்களை வருக வருக என்று வரவேற்று, என் உரையை முடித்துக் கொள்கிறேன்.