பெங்களூரு: நீரஜ் சோப்ரா கிளாசிக் முதலாவது ஈட்டியெறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டியெறிதல் முதல் சாம்பியன்ஷிப் போட்டி, பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஈட்டியெறிதல் போட்டிகளில் முன்னணியில் உள்ள பல வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில், ஜெர்மனை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோஹ்லர், கென்யாவை சேர்ந்த, 2015ம் ஆண்டின் உலக சாம்பியன் ஜூலியஸ் யேகோ, பிரேசிலை சேர்ந்த தென் அமெரிக்க சாதனையாளர் லூயிஸ் மரிசியோ டா சில்வா, அமெரிக்காவை சேர்ந்த பான் ஆம் விளையாட்டுகள் வெற்றியாளர் கர்டிஸ் தாம்ப்சன் குறிப்பிடத்தக்கவர்கள்.
இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா, ஐந்து சுற்றுகளின் முடிவில் 86.18 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து முதலிடத்தை பிடித்தார். கென்யாவை சேர்ந்த ஜூலியஸ் யேகோ 84.51 மீட்டர் தூரமும், இலங்கையை சேர்ந்த ரமேஷ் பதிரகே 84.34 மீட்டர் தூரமும் ஈட்டியெறிந்தனர். அதனால், இப்போட்டியின் முதல் சாம்பியனாக உருவெடுத்த அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. கென்யா வீரர் ஜூலியஸ் யேகேவுக்கு வெள்ளிப் பதக்கமும், 3ம் இடம் பிடித்த இலங்கை வீரர் ரமேஷ் பதிரகேவுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.