*6 நாட்கள் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
*உயர்கல்வித்துறை உத்தரவு
பெரம்பலூர் : பெரம்பலூர், வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பட்ட வகுப்புகள் இன்று தொடங்குகிறது. முதல் 6 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.ஏ வரலாறு, பி.காம் வணிகவியல், பி.பி.ஏ வணிக நிர்வாகவியல், பி.எஸ்.டபிள்யு சமூகப் பணி, பி.ஏ சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி காணினி அறிவியல், பி.சி.ஏ கணினி பயன்பாட்டியல், பி.எஸ்.சி இயற்பியல், பி.எஸ்.சி வேதியியல், பி.எஸ்.சி நுண்ணுயிரியல், பி.எஸ்.சி உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய 14 பட்ட வகுப்புகள் உள்ளன.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் வணிகவியல், பி.பி.ஏ வணிக நிர்வாகவியல், பி.எஸ்.சி கணினி அறிவியல், பி.எஸ்.சி இயற்பியல், பி.எஸ்.சி வேதியியல், பி.எஸ்.சி தாவரவியல், பி.எஸ்.சி விலங்கியல், பி.எஸ்.சி உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய 10 பட்ட வகுப்புகள் உள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025- 2026ஆம் கல்வி ஆண்டிற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே- மாதம் 7ம் தேதி முதல் 27ஆம் தேதி) வரை < http://www.tngasa.in/ > என்ற இணைய தளம் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டன. கடந்த 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் கடந்த 30ஆம் தேதி முதல் இணைய தளம் வாயிலாக விண்ணப்பப்பதிவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாதத் தொடக்கத்தில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், அந்தமான்- நிக்கோபார் தமிழ் மாணவர்கள், தேசிய மாணவர் படை, பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 700 இடங்களுக்கு 300க்கும் குறைவான மாணவ, மாணவியரும், வேப்பந்தட்டை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 500 இடங்களுக்கு 300க்கும் குறைவான மாணவ, மாணவியரும் கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ளதால் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு செல்போன்களில் அழைப்பு விடுத்தும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சாதி இட ஒதுக்கீடு அடிப்படையில், குறிப்பிட்ட பிரிவில் சேர்க்கை இல்லாத பட்சத்தில், இதர பிரிவு மாணவர்களையும் கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கான பட்ட வகுப்புகள் தொடங்குகிறது. முதல் 6 நாட்களுக்கு மாணவருக்கு புத்தாக்க பயிற்சி அளித்திட உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி முதல் நாளான இன்று கல்லூரியின் கட்டமைப்பு, வரலாறு, மாணவ, மாணவியரிடையே அறிமுகம், சிறப்பு விருந்தினரின் தன்னம்பிக்கை பேச்சு இடம் பெற உள்ளது.
ஜூலை 1ஆம் தேதி மாணவ மாணவியருக்கான ஸ்காலர்ஷிப், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டம், விடுதி வசதி குறித்து விவரிக்கவும், 2ம்தேதி மருத்துவர்கள் கொண்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்க புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளதால் ஏற்கனவே காலையில் அறிவியல் பிரிவு பட்ட வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் கலைப்பிரிவு பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வந்த கல்லூரி வகுப்புகள், ஜூலை மாதம் முதல் காலையில் 9.00 மணிக்கு தொடங்கி பகல் 1.30 மணிக்கு முடிவடையும் விதமாக ஒரே கட்டமாக வகுப்புகள் நடைபெற உள்ளது.
வேப்பந்தட்டை அரசு அறிவியல் கல்லூரிக்கு போது மான கட்டிட வசதி இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்ட பிறகு அடுத்தக் கல்வி ஆண்டு முதல் ஒரே கட்டமாக கல்லூரி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
(கூடுதல் பஸ் வசதி வேண்டும்)
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், வேப்பந்தட்டை- கிருஷ்ணாபுரம் இடையே இயங்கி வரும் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் இன்று தொடங்க உள்ளதால், ஆத்தூர், துறையூர் வழித்தடங்களில் கூடுதல் பஸ் வசதிகளை செய்து தர வேண்டும் என கல்லூரி நிர்வாகமும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.