திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் இந்திரன்ஸ். ஆடை அலங்கார நிபுணராக மலையாள சினிமாவில் நுழைந்த இவர் பின்னர் நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, மேலேப்பரம்பில் ஆண் வீடு, அப்போத்திக்கரி, ஸ்படிகம், அனியன் பாவா சேட்டன் பாவா, ஹோம் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்துள்ளார். இவர் கதாநாயகனாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பிற்கான தேசிய மற்றும் கேரள அரசு விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன. நான்காம் வகுப்பில் படிப்பை நிறுத்திய இந்திரன்சுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்நிலையில் கேரள அரசின் எழுத்தறிவுத் திட்டத்தின் மூலம் நேரடியாக ஏழாம் வகுப்பு இணைத் தேர்வு எழுத இவர் தீர்மானித்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக இவர் தீவிரமாக பாடங்களை படித்து வந்தார். நேற்று திருவனந்தபுரம் அட்டங்குளங்கரை பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் இவர் தேர்வு எழுதினார்.