சென்னை: ‘‘பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த வேண்டும்’’ என்று சமக்ரசிக்ஷா மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தை பள்ளிக்கல்வி இயக்குநர் நடத்தினார்.
அதில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவியரின் விவரங்கள் பிழையின்றி தயாரித்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாமினல் ரோல் தயார் செய்யும் பணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரையாண்டுத் தேர்வை டிசம்பர் மாதம் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கும். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை நடக்கும்.
இதற்கான அட்டவணைகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், மேற்கண்ட தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் இரண்டு செட்களாக தயாரிக்கப்படும். இந்த கேள்வித்தாள்கள் தேர்வு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 2 மணிக்கு பதிவிறக்கம் செய்யும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வறு சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
* அரையாண்டு விடுமுறை
அரையாண்டுத் தேர்வுகளை பொருத்தவரையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 22ம் தேதி வரை நடக்கும், 6-10ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 21ம் தேதி முடிகிறது. இதையடுத்து, 6-10ம் வகுப்புகளுக்கு 11 நாட்களும், பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும் விடுமுறை அளிக்க உள்ளனர். பின்னர் 2024 ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்படும்.