திருவனந்தபுரம்: ஆட்டோவில் வைத்து 5ம் வகுப்பு மாணவியை பலமுறை பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் இரவிப்பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (48). ஆட்டோ ஓட்டி வருகிறார். இப்பகுதியைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் இவரது ஆட்டோவில் தான் பள்ளிக்கு சென்று வந்தனர். திருவல்லா பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவியும் ஷாஜியின் ஆட்டோவில் தான் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். வீட்டுக்கு திரும்பும் வழியில் இந்த மாணவி தான் ஆட்டோவிலிருந்து கடைசியாக இறங்குவார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஷாஜி, மற்ற மாணவ, மாணவிகள் இறங்கிய பின்னர் ஆட்டோவை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் ஆட்டோவில் தனியாக இருந்த 5ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஷாஜி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்தது. இந்நிலையில் ஒருநாள் அந்த மாணவியை வீட்டில் இறக்கி விடாமல் கொண்டு செல்வதை கவனித்த மாணவியின் உறவினர் ஒருவர் இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நடத்திய விசாரணையில் தான் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து திருவல்லா போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஷாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பத்தனம்திட்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி டோனி தாமஸ் வர்கீஸ் நேற்று தீர்ப்பளித்தார். ஆட்டோ டிரைவர் ஷாஜிக்கு 3 ஆயுள் சிறையும், ₹3.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் ஆயுள் முழுவதும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.