ஈரோடு: ஈரோட்டில் 12ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாணவர்களை போலீஸ் கைது செய்தது. ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்த சிவா-சத்யா தம்பதியினரின் மகன் ஆதித்யா (17). இவர், குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தங்கையும் அதே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷினி நேற்று உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை. ஆதித்யா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர், பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து நேற்று மாலை பள்ளிக்கு எதிரே ஆதித்யா சுயநினைவின்றி கிடந்தார்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆதித்யாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, ஆதித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஆதித்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். தொடர்ந்து, ஆதித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லக்கூடாது என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில், ஈரோடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆதித்யாவின் பெற்றோர் ஈரோடு வடக்கு போலீசில், ஆதித்யாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆதித்யாவின் உடலை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முன்விரோதம் காரணமாக பள்ளிக்கு வெளியே சக மாணவர்களுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தகராறில் சக மாணவர்கள் தாக்கியதில் மாணவன் ஆதித்யா உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் 12ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாணவர்களை போலீஸ் கைது செய்தது.