சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயின்று வரும் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் முதன்மை தேர்விற்காக தயாராகும் ஆர்வலர்களுக்கு, தமிழ்நாடு முதல்வர் சார்பில் வாழ்த்து மடல் மற்றும் பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டது. முதன்மை தேர்விற்காக அயராது பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் வெற்றிகரமான தயாராவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான விழா நேற்று முன்தினம் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடந்தது. இதில், பயிற்சித் துறைத் தலைவர் விக்ரம் கபூர் அனைத்து பயிற்சியாளர்களுக்கு வாழ்த்து மடல்கள் மற்றும் புத்தகங்களை தனிப்பட்ட முறையில் வழங்கி சிறப்பித்தார். கூடுதல் பயிற்சித் துறை தலைவர் ராகவேந்திரன், அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மைய முதல்வர் சரவணன் மற்றும் போட்டி தேர்வுகள் கூடுதல் இயக்குனர் சுதாகரன், நிர்வாக அலுவலர் காயத்ரி சுப்ரமணி பங்கேற்றனர்.