வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தற்காலிக சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் 15 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர், அகரம் சேரி கிராமங்களுக்கு இடையே பாலாற்றில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக அந்த தற்காலிக சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மேல் ஆலத்தூர், கொத்த குப்பம், பட்டு, கூடநகரம், பீமாபுரம், அலங்காநல்லூர், ஆலம்பட்டரை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள், பள்ளிகொண்டா மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அகரம் சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கான அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, பள்ளிகள் பாலாற்றுக்கு மறுபுறம் அமைந்துள்ளதால் 1 கிலோ மீட்டருக்கு பதிலாக, 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மழை காலங்களில் தற்காலிக சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது தொடர்ந்து வருவதால், இந்த பகுதியில் நிரந்தரமாக தரைப்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.