மதுரை: உரிமையியல் (சிவில்) பிரச்னைகளில் காவல்துறையினர் தலையீடு செய்வதற்கு தடை விதிக்கக் ேகாரி ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் சிவில் வழக்குகளில் காவல் துறையினர் தலையீடு செய்யக்கூடாது என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
டிஜிபி சுற்றறிக்கையின்படியும், சிவில் வழக்குகளில் போலீசார் தலையிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொடர்ந்து போலீசார் சிவில் வழக்குகளில் ஏன் தலையீடு செய்து வருகின்றனர்? இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபி தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘சிவில் வழக்குகளில் போலீஸ் தலையிடக்கூடாது என டிஜிபி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதையும் மீறி சில காவல் துறையினர் தலையீடு செய்வது வருத்தத்திற்குரியது. ஒரு சிலர் மட்டுமே இதுபோன்று நடந்து கொள்கின்றனர். இந்த குறைபாடுகளை முற்றிலும் எவ்வாறு சரி செய்ய முடியும் என்பது குறித்து, தமிழக டிஜிபியுடன் ஆலோசனை செய்யப்படுகிறது. மூத்த காவல்துறை தலைவர் (ஐஜி) மற்றும் மூத்த கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்’’ என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.