டெல்லி : சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராக குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும். இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது என்றும் அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதிகள் நியமன நடைமுறையைத் தொடங்கியுள்ளதால், தற்போதைய நியமனத்துக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் குறைந்தபட்ச நடைமுறைத் தேவை பொருந்தாது. அதேவேளையில், அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் என்று நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.