பெரம்பூர்: கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த வளர்மதி (52), கடந்த மே மாதம் 29ம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை தொடர்ந்து வந்த மர்ம நபர், வளர்மதி கழுத்தில் கிடந்த மூன்றரை சவரன் செயினை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட வளர்மதி, செயினை பிடித்துக்கொண்டு, அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர், இதுகுறித்து கொளத்தூர் குற்றப்பிரிவில் வளர்மதி புகார் அளித்தார். கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால், சிசிடிவி கேமராவில் போதிய ஆதாரம் கிடைக்காததால், அப்பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களை வைத்து, குறிப்பிட்ட எண்களை சேகரித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், குறிப்பிட்ட இடத்தில் ஒரே எண்ணில் இருந்து பல்வேறு அழைப்புகள் வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த எண்ணை கண்காணித்த போது அந்த எண் காஞ்சிபுரம் ஹைதர் பேட்டை தெருவை சேர்ந்த அன்சாரி (30) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று காஞ்சிபுரம் சென்று குறிப்பிட்ட அந்த வீட்டிலிருந்த அன்சாரியை பிடித்து விசாரித்த போது, தனக்கும் அந்த செயின் பறிப்பு சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் உருவத்தை வைத்து சோதனை செய்தபோது, அன்சாரி அந்த தெரு வழியாக வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த புகைப்படத்தை காண்பித்து விசாரித்த போது, அவர்தான் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. பின்னர், அவரை கொளத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, போலீசார் விசாரணை நடத்தினர் அதில், அன்சாரி சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு அது சம்பந்தமான தொழில் நடத்தியுள்ளார். தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கடனை கொடுத்துள்ளார்.
பின்னர், போதிய வருவாய் இல்லாததால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் வந்து உணவு டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அன்சாரியின் மனைவி, அடகு வைத்த தனது நகைகளை மீட்டுக் கொடுக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் தொடர்ந்து அன்சாரியை செல்போனில் தொடர்பு கொண்டு நகைகளை மீட்டு தரும்படி தொல்லை செய்துள்ளார். இதனால், அன்சாரி சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்டு, காஞ்சிபுரம் சென்று, அந்த நகையை அடகு வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில் மனைவியின் நகையை மீட்டு கொடுக்க திட்டமிட்டுள்ளார். சில இடங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், இதற்கு முன், அவர் திருடியது கிடையாது என்பதால் யாராவது பார்த்துவிட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்தில் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து, இரவில் செயின் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, அன்று இரவு 9 மணிக்கு திருட முயற்சி செய்துளளார். அதன்படி, சாலையில் நடந்து சென்ற வளர்மதி நகையை பறிக்க முயன்றபோது, செயின் கையில் சரியாக மாட்டாததாலும், அவர் கூச்சலிட்டதாலும் பயத்தில் ஓடி தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, கோயம்பேடு சென்றுள்ளார். அங்கு தனது பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார், என்பது தெரியவந்தது. போலீசாரிடம் கதறி அழுத அன்சாரி, இனி இவ்வாறு செய்ய மாட்டேன். நான்தான் நகையை பறிக்கவில்லையே, என்னை விட்டு விடுங்கள், என கெஞ்சியுள்ளார். இதை ஏற்காத போலீசார், அன்சாரி மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.