சென்னை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.227 கோடியாக அதிகரித்துள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி கூறினார்.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி, நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களை வெளியிட்ட, வங்கியின் நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1.457 கோடியாகவும், அதில் இதர வருமானம் ரூ.1.91 கோடியாகவும் உள்ளது. மொத்த லாபம் ரூ.414 கோடியாகவும், நிகர லாபம் ரூ.227 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.94,060 கோடியாக உள்ளது. மேலும் வங்கியின் வைப்புப் தொகை மற்றும் கடன்கள் முறையே ரூ.51,655 கோடியாகவும், ரூ.42,405 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வராக் கடன் 2.51 சதவீதமாகவும், வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.40 சதவீதமாகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.6,759 கோடியில் இருந்து ரூ.7,650 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இன்று வரை 752 கிளைகள் மற்றும் 1,671 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு காமகோடி தெரிவித்தார்.