சென்னை: 2023-24ம் நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 8 சதவீதம் அதிகரித்து ரூ.1016 கோடியாக உயர்ந்துள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், 2023-24ம் நிதியாண்டிற்கான வருடாந்திர கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் என்.காமகோடி சென்னையில் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
அதில் வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் தெரிவித்தார்கள். வங்கியின் மொத்த வியாபாரம் கடந்த நிதியாண்டில் 6 சதவீதம் உயர்ந்து ரூ.102138 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வைப்பு தொகை 6 சதவீதம் உயர்ந்து ரூ.55657 கோடியாகவும் மற்றும் கடன்கள் கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் உயர்ந்து ரூ.46481 கோடியாகவும் உள்ளது. மேலும் வங்கியின் மொத்த லாபம் ரூ.1517 கோடியாக உள்ளது. அதே சமயம் வங்கியின் நிகர லாபம் 8 சதவீதம் அதிகரித்து ரூ.1016 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.2123 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.7421 கோடியில் இருந்து ரூ.8374 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் 3.99 சதவீதம் ஆகவும், நிகர வாராக்கடன் 1.97 சதவிதம் ஆகவும் உள்ளது. மூலதன விகிதம் 23.84 சதவீதம் ஆக உள்ளது. வங்கி இதுவரை 800 கிளைகளையும், 1677 தானியங்கி பண பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்தார்கள்.