சென்னை: மழைநீர் வடியாத பகுதிகளில் இருந்து மீட்கப்படுவோரை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்வதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் தொடர் கனமழை காரணமாக சென்னை பெரியளவில் பாதிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி காலை 9 மணி வரை சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து மழை பெய்து பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அன்று இரவு மழை நின்ற பிறகு மறுநாள் (டிச.5ம் தேதி) காலை 50 சதவீத பேருந்துகள் மழைநீர் வடிந்த இடங்களில் இயக்கப்பட்டன. மழைநீர் வடிந்த பகுதிகளில் நேற்று 80 சதவீத பேருந்துகள் இயக்கத்தை மாநகர போக்குவரத்து கழகம் தொடங்கியது.
தற்போது மழைநீர் வடியாத பகுதிகளில் இருந்து மீட்கப்படுபவர்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்வதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: செம்மஞ்சேரியில் இருந்து குமரன் நகர் இடையே வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அந்த பகுதியில் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வரும் மக்களை அந்த பகுதியில் இருந்து நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல 17 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதேபோல பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் ஆவின் நிர்வாகத்தின் கோரிக்கையை அடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டது. எங்கெல்லாம் பேருந்துகள் தேவையோ அங்கு எல்லாம் பேருந்துகளை இயக்கினோம். கடந்த டிச.4ம் தேதி இரவு வெளியூர்களில் இருந்து கோயம்பேட்டிற்கு வந்தவர்களுக்காக இரவு நேர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து பிராட்வே, மாதவரம், ஆவடிக்கு இரவு பேருந்துகள் இயக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அம்பத்தூர் டூ அண்ணா சாலை: ஒரு பெண் பயணிக்காக இயக்கப்பட்ட பஸ்
கனமழை பெய்த நேரத்தில் ஒரே ஒரு பெண் பயணிக்காக அம்பத்தூரில் இருந்து அண்ணா சாலை வரை பேருந்து இயக்கப்பட்டது. ஒரே பயணிக்காக பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துனருக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள் என்றால் அதில் சேவையாக சரியாக இருக்காது என்ற பொது கருத்து மக்களிடையே இருக்கிறது. ஆனால் அனைத்து விதமாக சவாலான சூழல்களிலும் சிறப்பாக பணி செய்வது அரசு துறைகள் மட்டும்தான்.