சிட்ரான் நிறுவனம், சி3 சிஎன்ஜி காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டீலர்களுக்கு சிஎன்ஜி கிட் சப்ளை செய்யப்பட்டு விடும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிரத்யேகமாக ரூ.93,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த காரில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல்இன்ஜின் இடம் பெற்றிருக்கும் வேரியண்டில்தான் சிஎன்ஜி கிட் பொருத்தப்படும்.
இது அதிகபட்சமாக 82 எச்பி பவரையும் 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி கிட்டில் முழுவதுமாக சிஎன்ஜி நிரப்பினால் 170 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது.
சிட்ரான் சி3யில் லைவ், ஃபீல், ஃபீல் (ஓ), ஷைன் ஆகிய 4 வேரியண்ட்களில் சிஎன்ஜி கிட்டை பொருத்திக் கொள்ளலாம். இவற்றின் ஷோரூம் விலை சுமார் ரூ.7.16 லட்சம் முதல் ரூ.9.24 லட்சம் வரை . சிஎன்ஜி கிட்களுக்கு 3 ஆண்டு அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் வாரண்டி வழங்குகிறது. மாருதி வேகன் ஆர், டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவையும் சிஎன்ஜி வேரியண்ட்டை வெளியிட்டுள்ளன. இதில், சி3 சிஎன்ஜி வேரியண்ட் விலை மாருதியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வேகன் ஆர் சிஎன்ஜி ஷோரூம் விலை சுமார் ரூ.6.89 லட்சம் முதல் ரூ.7.13 லட்சம் வரை உள்ளது.