புதுடெல்லி: இந்தியர்கள் குடியுரிமையை கைவிட்டு வெளியேறுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்து மூலமாக அளித்த பதிலில், 2023ம் ஆண்டில் 2.16 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
‘‘வணிக ஆளுமைகள் இந்திய குடியுரிமையை கைவிட்டு சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற இடங்களுக்கு அதிக அளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். குடியுரிமையை கைவிட்ட இந்தியர்களில் பலர் மிகவும் திறமையானவர்கள், படித்தவர்கள். உள்நாட்டில் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவும்போது அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது நமது பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இது அடுத்த சில ஆண்டுகளில் நமது வரி வருவாய் தளத்தை தீவிரமாக குறைக்கும்’’ என்றார்.