புழல்:செங்குன்றம் பேரூராட்சியில், தடையில்லா மின்சாரம் வழங்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. செங்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் தெரு, அம்பேத்கர் தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, பன்னீர்செல்வன் தெரு, திருவிகா தெரு, வேணு கோபால்சாமி தெரு, திருவள்ளுவர் தெரு, தேவகி தெரு, ஜீவானந்தம் தெரு, மக்கள் முற்போக்கு மன்றம் தெரு, சி.கே. மாணிக்கனார் தெரு, சுப்பிரமணி பாரதியார் தெரு, வஉசி தெரு, நேதாஜி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் தொடர்ந்து தினசரி ஐந்து மணி நேரம் தொடர் மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால், இங்கு உள்ள மக்கள் குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட செங்குன்றம் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதலாக புதிய ட்ரான்ஸ்பார்மர்களை அமைத்துத் தருமாறு, செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை சந்திக்கும் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த செங்குன்றம் போலீஸ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ‘‘நாங்கள் உடனடியாக சரி செய்து தடை இல்லா மின்சாரம் வழங்குவோம்.’’ என உறுதி அளித்தனர். அதன்பேரில், சாலை மறியலை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதே நிலை தொடர்ந்து வருகிறது. எனவே இது குறித்து பேரூராட்சி பத்தாவது வார்டு கவுன்சிலர் கோமதி பாஸ்கர் தமிழக முதலமைச்சர் தனி பிரிவு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. எனவே புதிதாக செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதிகளில் புதிதாக டிரான்ஸ்பார்மர்களை அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.