சென்னை: அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோ மீட்டர் நீள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக மிக நீளமான நடைபாதை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரையில் 8 கிமீ நீளத்திற்கு இந்த பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அடையாறு எல்பி சாலை மேம்பாலம் அருகே உள்ள டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து தொடங்கும் இந்த நடைபாதை, தியோசாபிகல் சொசைட்டி அமைந்துள்ள பெசன்ட் அவென்யூ வழியாக செல்கிறது.
பின்னர் 3வது அவென்யூவில் வலதுபுறம் சென்று, இடதுபுறமாக 5வது அவென்யூவில் சென்று, எலியட்ஸ் கடற்கரையை அடைகிறது. எலியட்ஸ் கடற்கரையின் முடிவில் அன்னை வேளாங்கண்ணி ஆலய சாலையில் வலதுபுறம் திரும்பி, மீண்டும் 3வது அவென்யூவுடன் இணைந்து, 2வது அவென்யூவில் வலதுபுறம் திரும்பி, மீண்டும் வந்த இடத்திற்கே வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 4ம் தேதி திறந்து வைக்கிறார். பின்னர், டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு முதல்வர் நடைபயணம் மேற்கொள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘இந்த நடைபாதையில், காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த சோதனை முகாம்கள் இருக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் சோதனை நடைபாதைகள் அமைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு முக்கிய காரணம், ஜப்பானின் டோக்கியோ சென்ற போது அங்கு அவர்கள் நடைபயிற்சிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பார்த்து வியந்தேன். தமிழகத்திலும் இதுபோல் அமைக்க வேண்டும் என்று விரும்பினேன்,’’ என்றார்.
* குப்பை மற்றும் புதர்கள் அகற்றம்
சென்னையில் நடைபயிற்சிக்காக கூடுதல் நடைபாதைகள் உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அமர்வதற்கு சீரான இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்படும் என்றும், நடைபாதைகள் சேதமடைந்த இடங்களில் மீண்டும் சீரமைக்கப்படும் என்றும், குப்பை மற்றும் புதர்களை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.