புதுடெல்லி: டெல்லியில் ஏப்.16ம் தேதி ஓட்டுப்பதிவு என்பது குறித்து வெளியான அறிக்கை உண்மை இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி ஆணையம் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. வழக்கம் போல வருகிற ஏப்ரல், மே மாதங்களில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 மக்களவை தேர்தல் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டு, மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த முறை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் முன்கூட்டியே, அதாவது அடுத்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், வடமாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில் டெல்லியில் ஏப்.16ம் தேதி மக்களவை தேர்தல் தேதி என்று குறிப்பிட்டு, அதற்கு ஏற்றவாறு தேர்தல் தொடர்பான அத்தனை திட்டங்களையும் வகுக்கும்படி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு டெல்ஙலி தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கை வெளியானது. இதனால் டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.16ம் தேதி நடத்தப்படும் என்றும் பரபரப்பாக செய்திகள் பரவின.
இதை மறுத்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை குறிப்பிட்டு தேர்தல் தொடங்கும் உத்தேச நாள் இதுதானா என்பதை தெளிவுபடுத்தும்படி சில ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடல் அடிப்படையில் அதிகாரிகள் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதற்காக மட்டுமே இந்த தேதி குறிப்பிடுவது வழக்கம். மாறாக தேர்தல் முறைப்படி நடக்கும் தேதியை தேர்தல் ஆணையமே வெளியிடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.