Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சினிமாவை பார்த்து மாணவர்கள் ரவுடிகளாக மாறுகின்றனர்: கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் வேதனை

திருவனந்தபுரம்: இப்போது வரும் வன்முறை காட்சிகள் நிறைந்த சினிமாக்களை பார்த்து பள்ளி மாணவர்கள் கூட ரவுடிகளாக மாறுகின்றனர் என்று கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடந்த சில தினங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மோதலில் ஏற்படுவது அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் கொச்சியில் ஒரு பள்ளி மாணவன் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு ராகிங் தான் காரணம் என்று அந்த மாணவனின் தாய் புகார் கூறினார்.

இந்நிலையில் கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியது: சமீப காலமாக கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைப் பொருளை பயன்படுத்துவதால் தான் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றனர். எனவே போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின் முதல்வர் பினராயி விஜயன் பேசியது: சமீப காலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர். படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப் பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக ஒரு போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தங்களது குழந்தைகளை கவனிக்க பெற்றோரும் மறந்து விடுகின்றனர். கேரளாவில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அரசு வந்த பின்னர் 87,702 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.