அண்ணாநகர்: பிரபல திரைப்பட இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் மதுரை மாவட்டத்தை ராஜகுமரன் (22) என்பவரை, கடந்த 2 நாட்களுக்கு முன், ஒரு கும்பல் கடத்தி, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய ராஜகுமரனை அரும்பாக்கம் போலீசார் மீட்டு விசாரித்தனர்.
அதில், நான் மதுரை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்தேன்.
அவரும் படிப்பை பிடித்தபிறகு சென்னை வந்து, பெசன்ட்நகரில் உள்ள ஒரு பைனான்சியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் டேனியல் (42), எனது காதலிக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவர் என்னை காதலிப்பதாக கூறியதால் மிகவும் கோபமடைந்தவர், நான் ஒழிந்தால் தான் அந்த பெண்ணை அடைய முடியும் என முடிவு செய்து, தனது கூட்டாளிகள் மூலம், என்னை கடத்தி அடித்து உதைத்தார்.
அப்போது, இளம்பெண்ணுடன் காதலை முறித்துக் கொண்டு விலகி செல். இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியதாக ராஜகுமரன் கூறியுள்ளார். அதன்பேரில், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர், ஆதித்தியா, கார்த்திகேயன், அகஸ்டின், திவாகர் ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, கடத்தல் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பைனாஸ் அதிபர் டேனியல், இவரது நண்பர் பெசன்ட் நகரை சேர்ந்த அந்தோணி (35) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம், 4 செல்போன் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.