சின்சினாட்டி: அமெரிக்காவில் நடக்கும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரசின் அரினா சபலெங்கா- உள்ளூர் நட்சத்திரம் ஜெசிகா பெகுலா மோதுகின்றனர். அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து, 23 வயது) மோதிய சபலெங்கா (26 வயது, 3வது ரேங்க்) 6-3, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்துக்கு நீடித்தது.
மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசாவை (26 வயது, 36வது ரேங்க்) எதிர்கொண்ட பெகுலா (30 வயது, 6வது ரேங்க்) 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் 1 மணி, 53 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் சபலெங்கா – பெகுலா இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றனர். இருவரும் ஏற்கனவே 6 முறை மோதியுள்ளதில் சபலெங்கா 4-2 என முன்னிலை வகிக்கிறார். கடைசியாக மோதிய 2023 டபுள்யூடிஏ பைனல்சில் வென்ற பெகுலா, 2020 சின்சினாட்டி ஓபனில் முதல் முறையாக மோதியதிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை முத்தமிட இருவரும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
* இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலியின் நம்பர் 1 யானிக் சின்னர்( 23 வயது) 7-6 (11-9), 5-7, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவை (27 வயது, 4வது ரேங்க்) வீழ்த்தினார். மாரத்தான் போராட்டமாக அமைந்த இப்போட்டி 3 மணி, 7 நிமிடங்களுக்கு நடந்தது. மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியஃபோ (26 வயது, 20வது ரேங்க்) 3-6, 6-1, 7-6 (7-4) என்ற செட்களில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனியை (21 வயது, 15வது ரேங்க்) வென்றார். பைனலில் சின்னர் – டியஃபோ மோதுகின்றனர்.