சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த அரையிறுதி போட்டியில், 6ம் நிலை வீராங்கனையான 30 வயதான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் 26 வயதான பவுலா படோசாவுடன் மோதினார். இதில் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் 3ம்நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினார். இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் பைனலில் ஜெசிகா-சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் இன்று அதிகாலை நடந்த போட்டியில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், 7-6,5-7,7-6 என்ற செட் கணக்கில், 3ம்நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வென்றார். தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ 4-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை வீழ்த்தினார். இதன்மூலம் 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட தொடர் ஒன்றில் முதன்முறையாக தியாபோ பைனலுக்குள் நுழைந்துள்ளார். நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் சின்னர்-பிரான்சிஸ் தியாபோ மோதுகின்றனர்.