அமெரிக்கா: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா (பெலாரஸ்) தகுதி பெற்றார். காலிறுதியில் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சனோவா (25 வயது, 17வது ரேங்க்) உடன் மோதிய சபலெங்கா (26 வயது, 3வது ரேங்க்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.மற்றொரு காலிறுதியில் களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (23 வயது, போலந்து) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் 17 வயது இளம் நட்சத்திரம் மிர்ரா ஆண்ட்ரீவாவை (ரஷ்யா) இரண்டரை மணி நேரம் போராடி வீழ்த்தினார்.
அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா – லெய்லா பெர்னாண்டஸ் (கனடா) மோதிய காலிறுதியும் 3 மணி, 4 நிமிடத்துக்கு மாரத்தான் போராட்டமாக அமைந்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த அப்போட்டியில் பெகுலா 7-5, 6-7 (1-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா) உடன் மோதிய பவுலா படோசா (ஸ்பெயின்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். அரையிறுதி ஆட்டங்களில் இகா ஸ்வியாடெக் – அரினா சபலெங்கா, பவுலா படோசா – ஜெஸ்ஸிகா பெகுலா மோதுகின்றனர்.