சின்சினாட்டி: அமெரிக்காவில் நடந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உள்ளூர் நட்சத்திரம் ஜெஸிகா பெகுலாவுடன் (30 வயது, 6வது ரேங்க்) மோதிய சபலெங்கா (26 வயது, 3வது ரேங்க்) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இது சபலெங்கா வென்ற 15வது சாம்பியன் பட்டம் என்பதுடன், டபுள்யு.டி.ஏ 1000 அந்தஸ்து தொடர்களில் அவர் கைப்பற்றிய 6வது பட்டம் ஆகும்.
* அசத்தினார் யானிக் சின்னர்
சின்சினாட்டி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பரபரப்பான பைனலில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியஃபோவை (26 வயது, 20வது ரேங்க்) எதிர்கொண்ட சின்னர் (23 வயது) 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் சின்னர் வென்ற 5வது பட்டம் இது. 2024ல் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் 2 பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.