சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா தகுதி பெற்றார். முதல் சுற்றில் சீனாவின் யாஃபன் வாங் (30 வயது, 62வது ரேங்க்) உடன் மோதிய ஸ்விடோலினா (29 வயது, 29வது ரேங்க்) 5-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 11 நிமிடங்களுக்கு நீடித்தது.
மற்றொரு முதல் சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (32 வயது, 45வது ரேங்க்) 7-6 (7-3), 7-6 (7-3) என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் விக்டோரியா டோமோவாவை (29வயது, 50வது ரேங்க்) போராடி வென்றார். இப்போட்டி 1 மணி, 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (26 வயது, 90வது ரேங்க்) தகுதிச் சுற்றில் 3-6, 6-2, 3-6 என்ற செட்களில் அமெரிக்காவின் அஷ்லின் க்ருகெரிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார்.