சென்னை: குரோம்பேட்டை அருகே நவபாஷாண தண்டபாணி கோயில் முருகன் சிலை சேதமடைந்த்து இருப்பதாக அந்த சிலையை வடிவமைத்த ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டைக்கு அடுத்துள்ள அஸ்தினாபுரத்தில் 2 சென்ட் நிலத்தை தனியார் நிர்வகிக்கும் நவபாஷாண தண்டபாணி கோயில் உள்ளது. இதில் மூலவராக 3 அடி உயரம் கொண்ட நவபாஷாண முருகன் சிலையை 9 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் குமார் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த நவபாஷாண சிலை சுரண்டப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் ரமேஷ் குமார் புகார் அளித்து இருக்கிறார்.
கடந்த மாதம் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம், ரமேஷ்குமாரை சிலையை ஆய்வு செய்ய அழைத்து சென்றார். ஆனால் ரமேஷ்குமாரை அனுமதிக்காத நிலையில், நேற்று காவல்துறை பாதுகாப்புடன் ரமேஷ் குமார் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர்; முருகன் சிலையில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். முருகன் சிலை ஆய்வின் போது பெண் பக்தர்கள் தேவராம், திருவாசகம் பாடினர். சேதமடைந்த நவபாஷாண முருகன் சிலைக்கு பதிலாக புதிய சிலையை வடிவமைத்து மீண்டும் கோயிலில் வைப்பது என இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வந்துள்ளனர்.