கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கேக் தயாரிப்புக்கான கலவை தயார் செய்யும் பணி கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது விதவிதமான சுவைகளில் தயாரிக்கப்படும் கேக்குகள் தான். அந்த கேக் தயாரிப்புக்கான பல கலவை தயாரிக்கும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓட்டல்களில் தொடங்கும்.
அந்த வகையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கேக் கலவை தயாரிக்கும் பணி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சுமார் 1000 கிலோ கேக் தயாரிப்பதற்கான கலவையை சமையற்கலை நிபுணர்கள் தயாரித்தனர். இதுபோன்று தயாரிக்கப்படும் கேக் கலவையை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு வரை காற்றுப்புகாத பைகளில் அடைத்து வைப்பர். கலவையில் சிறப்பான முறையில் நொதித்தல் நடைபெற்று பின்னர் சுவைமிகு கேக் தயாரிக்கப்பட உள்ளது.