திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி, களமசேரியில் கடந்த மாதம் 29ம் தேதி யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெப மாநாடு நடந்த கூட்ட அரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் சம்பவ இடத்தில் ஒருவர், ஆஸ்பத்திரியில் 2 பேர் என 3 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இது குறித்து கேரள போலீசாரும், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில்கொச்சி தம்மனம் பகுதியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் (57) என்பவர், ஜெபக்கூட்டத்தில் குண்டு வைத்ததாக கூறி திருச்சூர் கொடகரை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரது 2 வீடுகளில் போலீசார் நடத்திய பரிசோதனையில் குண்டு தயாரிக்கப் பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. யெகோவாவின் சாட்சிகள் அமைப்பில், தான் 15 வருடங்களாக இருந்த போதிலும் அந்த அமைப்பின் நடவடிக்கைகள் பிடிக்காததால் குண்டு வைத்ததாக அவர் போலீசிடம் தெரிவித்தார். விசாரணைக்குப் பின் போலீசார் டொமினிக் மார்ட்டினை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆலுவா பகுதியைச் சேர்ந்த மோளி ஜாய் (61) என்ற பெண் நேற்று அதிகாலை இறந்தார். அதைத்தொடர்ந்து களமசேரி குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தற்போதும் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது.