சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பராமரிப்பு பணிகள் முடிந்து ரோப்கார் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மலைமீதுள்ள இக்கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக சென்று சுவாமியை தரிசிக்க வேண்டும். ஆனால் படி ஏற முடியாத நிலையில் உள்ள வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்டவர்கள் சுவாமியை தரிசிக்க முடியாமல் தவித்தனர். எனவே பக்தர்களின் கோரிக்கை ஏற்ற தமிழக அரசு ரோப்கார் சேவையை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
இதற்கு கட்டணமாக மலை ஏறுவதற்கு ரூ.50 மலையில் இருந்து இறங்குவதற்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. மாதந்தோறும் பராமரிப்பு பணி காரணமாக 2 அல்லது 3 நாட்கள் ரோப்கார் சேவை நிறுத்துவது வழக்கம். அதன்படி இம்மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 24, 25ம் தேதிகளில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று காலை முதல் ரோப் கார் சேவை வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதையடுத்து பக்தர்கள் ரோப் காரில் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.