புழல்: சோழவரம் அடுத்த அத்திப்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு மற்றும் அலுமினிய மோல்டிங் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மின்சார பொருட்கள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் என பல்வேறு தேவைகளுக்கு இரும்பு மற்றும் அலுமினியத்தை உருக்கி மோல்டிங் தயாரிக்கும் பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.
இந்த தொழிற்சாலையில் அலுமினியக் கழிவுகளின் இருப்பு குறைந்து காணப்பட்டதையடுத்து, சிசிடிவி காட்சிகளை தொழிற்சாலை நிர்வாகம் ஆய்வு செய்தது. அதில், கடந்த 4 மாதங்களில் 16 முறை சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கழிவு பொருட்களை வாகனங்களில் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சாலையின் பாதுகாப்பு மேலாளர் ராஜகுரு சோழவரம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சோழவரம் குற்றப் பிரிவு ஆய்வாளர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மஞ்சேஷ்(25), அர்மன்(20), நாகினா(23) சோழவரம் அடுத்த பூதூர் பெருமாள் கோவில் தெரு சேர்ந்த செல்வம்(30), பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன்(30) ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு உடந்தையாக இருந்த தொழிற்சாலை அதிகாரிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.