சென்னை: சோழவரத்தில் திமுக பிரமுகர் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. லாரி டிரைவருக்கும் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த சோழவரம் கோட்டைமேடு கென்னடி தெருவை சேர்ந்தவர் ஜெகன் (38), சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர். இவரது மனைவி அபிஷா பிரியா வர்ஷினி (33), சோழவரம் ஊராட்சி துணைத் தலைவர். நேற்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அப்போது வீட்டின் மாடியில் இருந்த ஜெகன் சத்தம் கேட்டு ஓடி வருவதற்குள் மர்ம ஆசாமிகள் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாய் வீட்டுக்கு சென்றிருந்த அபிஷா பிரியா வர்ஷினி விரைந்து வந்தார். சம்பவம் பற்றி சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனிடையே, சோழவரம் பைபாஸ் சாலையில் லாரி பார்க்கிங் செட்டில் சோழவரம் அம்பேத்கர் நகர் சேர்ந்த சிவா (40) என்ற லாரி டிரைவர் இருந்துள்ளார். அங்கேயும் 5 பேர் கும்பல் சென்று கலாட்டா செய்தபோது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதை பார்த்த லாரி டிரைவர் சிவா தட்டிக்கேட்டதற்கு அவரது இடதுகையில், கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். மேலும், சோழவரம் அருகே உள்ள ஆங்காடு ஊராட்சி சிறுணியம் காலனி கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (60), இவரது மகன்கள் சரண்ராஜ் (38), சுந்தர் (34) ஆகிய மூவரும் வீட்டில் தனியாக வாட்டர் கேன், ஹாலோ பிளாக் கல் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டில் இருந்தபோது நேற்று மதியம் 5 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று, முதுகில் மாட்டியிருந்த தோல் பையில் கத்திகளை கொண்டு வந்து வெளியில் இருந்த வாடிக்கையாளர்களின் கார் கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் வீட்டின் இரும்பு கதவு கேட்டை திறந்து வீட்டுக்குள் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் பின்பக்கம் கண்ணாடியையும் உடைத்தனர். அப்போது உறவினர்கள் வந்து கேட்டபோது, நீங்கள் வளரக்கூடாது என ஆபாசமாக திட்டியதால் உடனே வீட்டில் இருந்தவர்கள் கதவை சாத்திக் கொண்டனர். பின்னர் கதவை கத்தியால் வெட்டிவிட்டு ஜன்னலையும் கத்தியால் சேதப்படுத்தினார்கள்.
இதை பார்த்த சுந்தர்ராஜ் வீட்டின் பின்புறம் தப்பி சென்று விட்டார். அவரையும் மர்ம கும்பல் விரட்டி சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் வந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த மூன்று இடங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.