Monday, February 26, 2024
Home » சித்தூரில் 31வது நாளாக நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் செய்து போராட்டம்

சித்தூரில் 31வது நாளாக நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் செய்து போராட்டம்

by Lakshmipathi

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நூதன முறையில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31வது நாளாக நேற்று சமையல் செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் தெலங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களை விட ரூ.1000 உயர்த்தி சம்பளம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் முதலமைச்சராகி 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தெலங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.14,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறது.

மாநில அரசு உடனடியாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் அதிகாரிகளின் மிரட்டல் இருக்கக்கூடாது. மேலும் அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாநில அரசு ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 வீதம் நிதி ஒதுக்குகிறது. இந்த நிதியால் அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் எண்ணெய் முதல் காஸ் சிலிண்டர் வரை, அத்தியாவசிய பொருட்கள் முதல் அரிசி பருப்பு வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ஆகவே ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 வீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 31 நாட்களாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இன்று சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இதுவரை மாநில அரசு அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஓரிரு நாட்களுக்குள் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் ஏஐடியுசி ஊழியர் சங்கம் சார்பில், அனைத்து அங்கன்வாடி ஊழியர் சங்கங்களுடன் இணைந்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஏஐடியுசி ஊழியர் சங்க நகர தலைவர் மணி, செயலாளர் கோபி, பொருளாளர் தாசிரி சந்திரா, அங்கன்வாடி ஊழியர் சங்கத் தலைவி பிரேமா, செயலாளர் சுஜினி உள்பட ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

15 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi