Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

"சித்திரை திருவிழாவின் போது கள்ளழகரை தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை இல்லை": ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சித்திரை திருவிழாவின் போது கள்ளழகரை தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாலவீதி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்கிறார். மனுவில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதி அமைப்புகளுக்கு சொந்தமான தனியார் மண்டகப்படிகளுக்கு கள்ளழகரை கொண்டு செல்லும் நிலை உள்ளது.

இதனால் மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது சாதி ரீதியான மண்டகப்படிகளுக்கு தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். கள்ளழகரை ஆரம்பக்கால பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டும் கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ் குமார், அருள் முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வழக்கறிஞர் செல்வகுமார் தரப்பில், தனியார் மண்டகப்படிகளுக்கும், சாதிய ரீதியான அமைப்பு மண்டகப்படிகளுக்கும் கள்ளழகரை கொண்டு செல்வதால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசு தரப்பில் பல நூற்றாண்டுகளாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுவரை சாதிய பிரச்சினைகள் ஏற்படவில்லை. முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கள்ளழகர் வழக்கமாக செல்லும் பாதையில், 483 மண்டக படிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது வரை சாதிய ரீதியான பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என கள்ளழகர் கோயில் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிகப்பெரிய பாரம்பரிய கொண்டாட்டம். மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். பல லட்ச பக்தர்கள் வருவதால் போதிய வசதி, பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மண்டகப்படி விவகாரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால், நீதிமன்றம் எந்த உத்தரவுவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.