*தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
ஓருர் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக, ஓசூர் பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது வழக்கம்.
இதற்காக ஓசூர் வந்து, இங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் திருவண்ணாமலை சென்று வருகின்றனர். இதற்காக போக்குவரத்து துறை மூலம் ஓசூரில் இருந்து திருவண்ணா மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதேபோல் நேற்றும் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக, மதியம் முதல் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், ஓசூர் பஸ் நிலையத்தில் திரண்டனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருவண்ணாமலை செல்வதற்காக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் இடம் பிடிக்க முண்டியடித்து பக்தர்கள் ஏறிச்சென்றனர். இதே போல் கார் மற்றும் சுற்றுலா வேன்களில் திருவண்ணாமலை செல்ல வந்ததால், பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கிருஷ்ணகிரி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. திருவண்ணமாலைக்கு புறநகர் மற்றும் நகர பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டதால், உள்ளூர் பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.