அருமனை: அருமனையை அடுத்த சிதறால் மலை கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. தினசரி 200க்கும் ேமற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். சமணர் மற்றும் பகவதி அம்மன் ஆகிய 2 கடவுள்களை கொண்ட முக்கிய கோயில் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். கிபி 1 முதல் 10 வரை சமணர்கள் இந்த பகுதியை ஆண்டதாக வரலாறு கூறுகிறது.
1958ம் ஆண்டு இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி இந்த நினைவு சின்னங்களை உருமாற்றங்கள் செய்யவோ, தவறான காரியங்களுக்கு பயன்படுத்தவோ கூடாது என் தெரிவிக்கப்பட்டது. அப்படி செய்தால் அச்செயலில் ஈடுபடும் நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ₹1 லட்சம் அபராதம் அல்லது 2ம் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும். மேலும் சுமார் 200 மீட்டர் முறைப்படுத்தப்பட்ட பகுதி வரை கட்டுமான பணிகளை செய்ய வேண்டும் என்றால் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இங்கு ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வரலாறு மற்றும் விதிக்குறிப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் சிலர் மலையின் உச்சி மற்றும் நடைபாதை பகுதியில் முக்கியமான இடங்களில் தமிழ் பலகைகளை மட்டும் குறிவைத்து உடைத்து உள்ளனர். பல பலகைகள் காணாமல் போய் விடுகின்றன. மேலும் அறிவிப்பு பலகை தூண்களும் சேதப்படுத்த பட்டுள்ளன. இது இயற்கை ஆர்வலர்களை வேதனை படுத்தி உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிதறால் மலை கோயிலை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.